அணியில் இருந்து ஒதுக்கப்பட்ட யுவராஜின் பரிதாபநிலை! – துரத்தும் சோகம்


இந்திய அணியில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ள நட்சத்திர துடுப்பாட்ட வீரரான யுவராஜ் சிங்கிற்கு இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ 3 கோடி ரூபா நிலுவை வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டுள்ள யுவராஜ் அணியில் மீண்டும் இடம்பிடிப்பதற்கான முயற்சிகளில் தீவிர முனைப்பு காட்டி வருகின்றார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ரி20 உலககிண்ண போட்டித் தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அதேவருடம் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் 7 போட்டிகளில் யுவராஜிக்கு விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

பி.சி.சி.ஐ கொண்டுள்ள விதிமுறைகளின் படி ஐ.பி.எல் போட்டிகளில் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒரு வீரர் இந்திய அணிக்காக விளையாடும் போது காயம் ஏற்பட்டு, ஐ.பி.எல் தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டால் அவருக்கான நட்ட ஈட்டினை பி.சி.சி.ஐ வழங்கும்.

இந்த விதிமுறைகளின் படி யுவராஜிக்கு 3 கோடிகள் வரையிலும் பி.சி.சி.ஐ கொடுக்க வேண்டிய நட்டஈடு இன்னும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து தொடர்ந்தும் பி.சி.சி.ஐயிடம் யுவராஜ் கோரிக்கைகளை முன்வைத்து வந்தபோதும் முறையான பதில்கள் எதுவும் கிடைக்கப்பெறாத நிலையில், பணத்தினை பெற்றுக் கொள்ள தொடர்ந்தும் யுவராஜ் முயற்சி செய்து வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

குறித்த பிரச்சினை தொடர்பில் பி.சி.சி.ஐ அதிகாரி ஒருவர் கூறுகையில் யுவராஜ் காப்பீடு தொடர்பில் முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்காத காரணத்தினால் இந்த இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments