ஐ.சி.சி கொண்டு வரவுள்ள புதிய மாற்றம்! – கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி


எதிர்வரும் வெள்ளிக்கிழமை உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரினை நடத்த ஐ.சி.சி ஒப்புதலை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

நியூசிலாந்தில் நடைபெற்றவுள்ள கூட்டத்தின்போதே ஐ.சி.சி டெஸ்ட் தொடரில் இந்த புதிய மாற்றத்தினை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது.

மாறிவரும் காலங்களுக்கு ஏற்ப கிரிக்கெட் விளையாட்டில் பல மாற்றங்களை ஐ.சி.சி தொடர்ந்தும் ஏற்படுத்திக் கொண்டு வருகின்றது.

தற்போதைய நிலையில் ஒரு நாள் போட்டிகள், மற்றும் ரி20 போட்டிகள் காரணமாக கிரிக்கெட்டின் அடையாளம் எனக் கூறப்படும் டெஸ்ட் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு குறைவடைந்துள்ளது.

இதன் காரணமாக முன்னணி அணிகள் மாத்திரமே தமக்கிடையில் டெஸ்ட் தொடர்களை நடத்த விரும்புகின்றது. இந்த நிலையில் அனைத்து நாடுகளுக்கும் டெஸ்ட் தொடரில் முன்னுரிமை வழங்க ஐ.சி.சி முன்வந்தது.

இதற்காக வகுக்கப்பட்ட ஆரம்பகட்ட திட்டங்களில் தேர்வு செய்யப்பட்ட ஒவ்வோர் அணியும் ஏனைய அணிகளுடன் உள்நாட்டில் ஒரு டெஸ்ட் போட்டியிலும், வெளிநாட்டில் ஒரு போட்டியிலும் மோத வேண்டும்.

இதில் முதலிடத்தினை பிடிக்கும் இரு அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை செய்ய வேண்டும் என விதிமுறை வகுக்கப்பட்டது.

நீண்ட காலம் இந்த டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர்பில் ஐ.சி.சி ஒப்புதலை வழங்காது வந்த நிலையில் எதிர்வரும் வாரத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், ஒருநாள் போட்டித் தொடர் போன்று 4 வருடங்களுக்கு ஒருமுறை இந்த டெஸ்ட் உலக கிண்ணத்தை நடத்தாமல் 2 வருடங்களுக்கு ஒருமுறை நடத்தும் ஆலாசனைகள் இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அதன்படி 2019 ஆம் ஆண்டு தொடக்கம் இந்த டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் ஆரம்பமாகும் என கூறப்படுவதோடு, தலைசிறந்த 9 அணிகள் இந்தத் தொடரில் மோதவுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோன்று, 5 நாட்களாக நடத்தப்படும் டெஸ்ட் போட்டிகள் 4 நாட்களாக குறைக்கப்படலாம் எனவும் கூறப்படுகின்றது.

ஐ.சி.சி கொண்டுவரவுள்ள இந்த மாற்றங்கள் காரணமாக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சி கலந்த பலத்த எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Post a Comment

0 Comments