தில்ருவானின் சுழலில் மடிந்தது பாகிஸ்தான்; அரபு இராட்சியத்தில் தொடரை வென்று வரலாற்றை எழுதியது இலங்கை..!!


இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெற்றது.

தனது இரண்டாவது இன்னிங்ஸில் 317 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 248 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதனால் இலங்கைஅணி 68 ஓட்டங்களால் வெற்றி பெற்றதுடன், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற தொடரை வெள்ளையடித்து புதிய வரலாற்றை எழுதியது.

சவாலான இலக்கைத் துரத்திய பாகிஸ்தான் அணியின் முதல் ஐந்து விக்கெட்டுக்களும் வெறும் 52 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டன. எனினும் அதன் பின்னர் அஷாட் ஷாபிக் மற்றும் சப்ராஸ் அகமட் இடையே 173 ஓட்டங்கள் பகிரப்பட்ட ஆட்டம் விறுவிறுப்பாகியது. அதன் பின்னர் 68 ஓட்டங்களுடன் சப்ராஸ் அகமட் ஆட்டமிழக்க, பின்வரிசை விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து சரிக்கப்பட்டன. இறுதிவரை போராடிய அஷாட் ஷாபிக்கும் 112 ஓட்டங்களுடன் ஒன்பதாவது விக்கெட்டாக வீழ்த்தப்பட்டார். இறுதியில் பாகிஸ்தான் அணி விக்கட்டுக்களையும் இழந்து 248 ஓட்டங்களையே பெற்றது.


பந்துவீச்சில் அற்புதமாக பந்துவீசிய தில்ருவான் பெரேரா 5 விக்கெட்டுக்களையும் ரங்கன ஹேரத் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்கள்.

முன்னதாக நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 482 ஓட்டங்களைக் குவித்தது. துடுப்பாட்டத்தில் திமுத் கருணாரட்ன 196 ஓட்டங்களைக் குவித்தார். பந்துவீச்சில் யாசீர்ஷா 6 விக்கெட்டுக்களை அள்ளினார்.


பதிலளித்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 262 ஓட்டங்களுக்குள் சுருண்டது. துடுப்பாட்டத்தில் அசார் அலி 59 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் ஹேரத் மற்றும் தில்ருவான் பெரேரா ஆகியோர் தலா 3 விக்கட்டுக்களை கைப்பற்றினார்கள்.

220 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை அணி, பாகிஸ்தானின் வேகத்துக்கும், சுழலுக்கும் தாக்குப்பிடிக்க முடியாது வெறும் 96 ஓட்டங்களுக்குள் சுருண்டது. இலங்கை சார்பாக குஷால் மெண்டிஸ் 29 ஓட்டங்களைப் பெற்றார். பாகிஸ்தான் சார்பாக பந்துவீச்சில் வகாப் ரியாஸ் 4 விக்கெட்டுக்களையும் ஹாரிஸ் சொஹைல் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்கள்.

இத் தொடர் வெற்றி மூலம் இலங்கை அணி, ஐக்கிய அரபு இராச்சியத்தில் முதன் முதலாகபாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் தொடரை வென்ற அணியாக வரலாறு படைத்தது.

Post a Comment

0 Comments